06/01/2026
SETC Volvo Bus: "திருச்செந்தூர் டூ சென்னை "
Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட் - ஜேம்ஸ்
வால்வோ பேருந்து :
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய வோல்வோ மல்டி-ஆக்சில் பேருந்துகள், தென் மாவட்ட பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பக்காவான நேர மேலாண்மை:
திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 06:30 மணிக்குச் சரியாகப் பேருந்து புறப்பட்டது. பொதுவாக அரசுப் பேருந்துகள் தாமதமாகப் புறப்படும் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் சரியான நேரத்தில் புறப்பட்டது.
தூத்துக்குடி வரை வாகன நெரிசல் இருந்த போதிலும் ஓட்டுநரின் சீரான வேகம் பயணிகளுக்கு நிம்மதியைத் தந்தது. தூத்துக்குடியில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிவிட்டு (இரவு 07:59) தூத்துக்குடி சுங்கச்சாவடியைத் தாண்டியது.
இரவு உணவு நிறுத்தம்:
பெரும்பாலும் அரசு பேருந்துகள் நல்ல உணவு நிறுத்தங்களில் நிறுத்தப்படவில்லை என்கிற புகார் இருந்தது, ஆனால் இந்த முறை நல்ல உணவகத்தில் நிறுத்தப்பட்டது. இரவு உணவிற்காக 08:20 முதல் 08:42 வரை சுமார் 22 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. சரியான நேரத்தில் உணவிற்காக நிறுத்தப்பட்டது பயணிகளுக்கு வசதியாக அமைந்தது. தொடர்ந்து பயணித்த பேருந்து, இரவு 09:44 மணிக்கு அருப்புக்கோட்டையை கடந்து சென்றது.
மதுரையில் எண்ட்ரி:
மதுரை மாநகருக்குள் செல்லாமல் வெளிவட்டச் சாலை வழியாகப் பயணித்த பேருந்து, இரவு 10:40 மணிக்கு மாட்டுத்தாவணி (MIBT) பேருந்து நிலையத்திற்குள் சென்று முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றினர், அதன் பிறகு புறப்பட்ட பேருந்தானது சரியாக இரவு 11.16 மணி அளவில் மதுரை புறவழிச்சாலையை அடைந்து பயணத்தை தொடர்ந்தது.
வோல்வோவின் ஏர்-சஸ்பென்ஷன் வசதியால் மிக நிம்மதியான உறக்கம் கிடைத்தது.நள்ளிரவு 12:39 மணிக்கு பூதக்குடி சுங்கச்சாவடியையும், அதிகாலை 01:20 மணிக்கு சமயபுரத்தையும் பேருந்து கடந்தது. பயணிகளின் அயற்சியைப் போக்க உளுந்தூர்பேட்டையை தாண்டி அதிகாலை 03:20 முதல் 03:40 வரை தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
சோதித்த மேல்மருவத்தூர் போக்குவரத்து நெரிசல்
அதிகாலை 04:35 மணிக்குத் திண்டிவனத்தை எட்டிய பேருந்து, 05:00 மணிக்கு ஆத்தூர் சுங்கச்சாவடியை வந்தடைந்தது. ஆனால், அதன் பிறகுதான் அந்தச் சவால் காத்திருந்தது. மேல்மருவத்தூர் கோயில் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் பேருந்து சிக்கியது.
காலை 04:55 மணிக்கு ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்தூர் வரை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நகர முடியாமல் தவித்தோம். ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்களின் வாகனங்கள் அதிகரித்ததே இந்த நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது.
12 மணி நேரத்திற்குள் கிளாம்பாக்கம்
மேல்மருவத்தூரில் ஏற்பட்ட அந்த ஒரு மணி நேரத் தாமதத்தையும் மீறி, ஓட்டுநர் பேருந்தைச் சமநிலையான வேகத்தில் இயக்கி, காலை 07:01 மணிக்குச் சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தை (KCBT) வந்தடைந்தது. அதே போல் பயணம் முழுக்க பேருந்தின் வேகமானது சராசரியாக 80-85 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. ஒரு மணி நேர டிராஃபிக் மட்டும் இல்லையென்றால், இந்நேரம் காலை 6 மணிக்கே சென்னைக்குள் நுழைந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண விவரம் (Fare Details)
தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்களில் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை வசூலிக்கப்படும் நிலையில், SETC வோல்வோ பேருந்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது கட்டணம் மிகவும் சிக்கனமாக உள்ளது.
ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ₹ 1,165
உடனடி டிக்கெட் கட்டணம் - 1115
ஒரு மணி நேர டிராஃபிக்கில் சிக்கினாலும், உரிய நேரத்திற்குப் பயணிகளைச் சேர்த்த SETC ஓட்டுநர்களின் திறமை பாராட்டத்தக்கது. சொகுசான மற்றும் வேகமான பயணத்தை விரும்புவோருக்கு இந்த வோல்வோ சேவை ஒரு சிறந்த வரப்பிரசாதம்.